Tuesday, November 8, 2011

பள்ளிக் காவலர் பெ.அர்ச்சுனன் மறைவு

சுமார் 7 வயதுக் குழந்தையாக இருக்கும்போதே, பிறந்த பெலாகுப்பம் கிராமத்தை விட்டுவிட்டு திண்டிவனம் ரோசனைப் பகுதிக்கு வந்துள்ளார். சாப்பாட்டிற்காக கூப்பிடுகின்ற வீட்டில் எல்லாம் மாடு மேய்த்துக் கொடுத்துள்ளார். பிறகு, கிடைக்கின்ற அன்றாடக் கூலி வேலைக்கும் சென்றுள்ளார்.


திண்டிவனம் வட்டம், பெலாகுப்பம் கிராமத்தில் பெருமாள்-சின்னப்பாப்பா தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே தாயை இழந்த நிலையில், வேலை தேடி ரோசனை வந்துள்ளார். இவரின் ஓய்வறியாத கடுமையான உழைப்பையும், நல்ல குணத்தையும் பார்த்த, நெற்குணம் நடேசன் தனது மகள் யசோதை அம்மாளை திருமணம் செய்துகொடுத்தார்.

சொந்தமாக உழைத்து முன்னேற மனைவியின் பெற்றோர் உதவியுடன் மாடும், வண்டியும் வாங்கியுள்ளார். மாட்டையும், வண்டியும் உயிர்போல நேசித்தார். உயிர் போகும்வரை உழைத்துக்கொண்டே இருந்தார்.

பள்ளி தொடங்கும்போது, அருகிலேயே இருந்து மிகப்பொறுப்பாய் பள்ளியிலிருந்த கட்டுமானப் பொருட்களைப் கண்காணித்துக் கொண்டிருந்தார். பாதுகாப்பது, வேலைகளைச் செய்து முடிப்பது உள்ளிட்டவைகளிலும், பள்ளியின் மீதும், அவருக்கிருந்த அக்கறை ஈடுபாட்டின் காரணமாக அவர் பள்ளிக்குக் காவலராக நியமனம் செய்யப்பட்டார்.

பள்ளி தொடங்கி ஒவ்வொரு நாளும் இவரின் காலடி படாமல் பள்ளி மூடப்பட்டதுமில்லை, திறந்ததுமில்லை. இவரின் அனுமதியில்லாமல், பார்வையில் படாமல் பள்ளியில் எந்தவொரு பொருளும் இடம் மாறியதில்லை.

கடந்த ஆண்டு பள்ளியில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் அனைத்துப் பணிகளுக்கும் உடனிருந்து ஒத்துழைத்தார். எல்லோருக்கும் எல்லா வேலைகளையும் செய்தார். விழா முடிந்த மறுநாள் உடல் நிலை சரியில்லாமல் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர். 10.05.2011 அன்று அங்கேயே மரணமடைந்தார். எவரும் எதிர்பார்க்காத, ஏற்றுக்கொள்ள முடியாத மரணம்.

செல்வம், ரமேஷ், செந்தில் என்கிற மூன்று மகன்கள், வாசுகிசுதா என்கிற ஒரே மகள் இவருடைய பிள்ளைகளாகும். இரு மூத்த மகன்களும் திருமணமாகி தனிக் குடும்ப வாழ்க்கை வாழ்கின்றனர். திருமணமாகாத மகன் செந்தில்(27), மகள் வாசுகிசுதா(24), உடல் நிலை சரியில்லாத மனைவி யசோதயம்மாள் ஆகியோர் தனியாக வாழ்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பள்ளியில் தினம் தினமும், நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் காவலரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நம்முடன் கலந்துறவாடி இருக்கின்றார்கள். ஒவ்வொரு நாளும் கூலி வேலை செய்து, குடும்பத்தைக் காப்பாற்றி, வளர்த்து வந்த மாபெரும் உழைப்பாளி. இவரின் எதிர்பாராத மரணத்தால் குடும்பமும் மிகுந்த கவலையுடன் வாழ்ந்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் உழைத்து உழைத்து குடும்பத்தைப் பாதுகாத்து, பள்ளியிலும் காவலராய்ப் பணியாற்றி, திடீரென மறைவுற்றது அவரது குடும்பத்திற்கும், பள்ளிக்கும் ஈடு செய்யமுடியாத இழப்பு. 

No comments:

Post a Comment