Tuesday, October 6, 2015

குழந்தையின் கற்பனை கதை

சீதை – ஸ்பைடர் மேன் – ஹல்க் – டோரா – ஹனுமான் – சரித்ரா – சென்னை- கதை  
------------------------------------------------------------------- 
சென்னையில் பெருமையாக சொல்லப்படும் பள்ளி ஒன்றில்  மழலையர் வகுப்பு (யு.கே.ஜி) மாணவர் சேர்க்கையின்போது குழந்தைக்கும், பள்ளி முதலவருக்கும் நடைபெற்ற உரையாடல்…
முதல்வர் குழந்தையிடம் பேசத் தொடங்கி
“உங்க.. பேரு என்ன?
“சரித்ரா”
“குட் உனக்குத் தெரிஞ்ச ஏதாவது சொல்லு பார்க்கலாம்”
“எனக்கு நிறையத் தெரியும் உங்களுக்கு என்ன வேணும்”
இடம் கிடைக்காதோ என பயந்துபோன சரித்ராவின் அம்மா லேசாக எடுத்துக்கொடுக்கப் பார்த்தார். ஆனால் முதல்வர் அதனைத் தடுத்துவிட்டார்.
“நீ சொல்லு.. ஏதாவது ரைம்ஸ், ஸ்டோரி உனக்குத் தெரிஞ்சத சொல்லு”
சரித்ரா சளைக்கவில்லை.
“ரைம்ஸா, ஸ்டோரியா. என்ன சொல்லணும்”
“சரி ஏதாவது ஸ்டோரி சொல்லு”
“நான் படிச்ச ஸ்டோரி சொல்லவா? இல்ல, நான் எழுதுன ஸ்டோரிய சொல்லவா”
“ஓ.. நீ ஸ்டோரியெல்லாம் கூட எழுதுவியா”
“ஏன் எழுதக்கூடாதா”
“சரி சொல்லு”
“ராவணன், சீதையை ஸ்ரீலங்காவுக்கு கடத்திட்டுப் போயிட்டாரு”
“ம்.. சொல்லு”
“சீதையை காப்பாத்துறத்துக்கு ராமன், ஹனுமான்கிட்ட ஹெல்ப் கேட்டாரு. ஹனுமானும் சரின்னு சொல்லிட்டாரு”
“ம்.. அப்புறம்”
“இப்போ அனுமான் அவரோட ஃப்ரெண்ட் ஸ்பைடர்மேனுக்கு போன் போட்டாரு” குழந்தையின் இந்த ட்விஸ்டை யாரும் எதிர்பார்க்கவில்லை.
“எதுக்கு”
“ஏன்னா.. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில நிறைய மலைகள் இருக்கு. ஸ்பைடர் இருந்தா டக்டக்னு கயிறு கட்டி வேகமாகப் போலாம்ல”
“ஹனுமானும் பறப்பாரே?’’ என்று ஆர்வத்துடன் முதல் பதில் சொன்னார்.
“பறப்பாரு.. ஆனா. அவரு கையில சஞ்சீவி மலை இருக்கிறதால அவரால வேகமாப் பறக்க முடியாது”
முதல்வர் ஆச்சரியத்துடன் வியந்து அமைதியானார். பெற்றோர் என்ன சொல்வது என தெரியாமல் தவித்தனர். சிறிது மெளனத்திற்குப் பிறகு குழந்தை கேட்டது “சொல்லட்டா.. வேணாமா?”.
“சொல்லு.. சொல்லு..” முதல்வருக்கு ஆர்வம் அதிகமானது.
“ஹனுமானும் ஸ்பைடர்மேனும் வேகமா இலங்கைக்குப் போய் ராவணன்கிட்ட சண்டை போட்டு சீதையை காப்பாத்திட்டாங்க. சீதை அவங்க ரெண்டு பேருக்கும் நன்றி சொன்னாங்க”
“ஏன்”
“உதவி செஞ்சவங்களுக்கு நன்றி சொல்லணும்தானே?”
“சரி.. சரி.. அப்புறம்”
“அப்புறம்.. ஹனுமான் போன் பண்ணி ஹல்க்கைக் கூப்பிட்டாரு”
எல்லோரும் குழந்தையை கேள்வியோடு பார்த்தனர். அதை உணர்ந்த குழந்தை.. “வரும்போது ரெண்டுபேரும் ஈசியா வந்துட்டாங்க.. இப்போ சீதையை தூக்கிட்டுப் போக ஆள் வேணும்ல”
“ஹனுமானே குழந்தையை தூக்கலாமே”
“எப்படி முடியும்? அவரோட ஒரு கையில் மலை இருக்கு. இன்னொரு கையில் ஸ்பைடர் மேன் கயிற்றைப் பிடிக்கணுமே.”
எல்லோரும் சிரித்துவிட்டனர்.
“ம்.. அப்புறம்”
“மூணு பேரும் இந்தியா கிளம்புறப்போ.. என் ஃப்ரெண்ட் அன்புவைப் மீட் பண்றாங்க. சீதா அவன்கிட்ட கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்தாங்க”
“உன் பிரெண்ட் அன்பு எப்படி  அங்க வந்தான்”
“இது நான் எழுதிய கதை யார் வேணாலும் வருவாங்க”
முதல்வருக்கு கோபமில்லை. அடுத்த ட்விஸ்ட்டுக்காக காத்திருந்தார்.
“அப்புறம் எல்லோரும்  இந்தியா வந்துட்டாங்க. சென்னைக்கு வந்து வேளச்சேரி பஸ் ஸ்டாண்டு கிட்ட நின்னாங்க”
“ஏம்மா பஸ் ஸ்டாண்டு கிட்ட நின்னுட்டாங்க”
“வழி மறந்துபோச்சு. அதான் நின்னுட்டாங்க. உடனே ஹல்க்குக்கு ஒரு ஐடியா வந்துச்சு. அவர் உடனே டோராவுக்கு போன் பண்ணார்”
டோரா என்பது வழிகாட்டும் கதாபாத்திரம் என்பது அன்றைக்குதான் தெரிந்தது.
“டோரா வந்ததும் எல்லோரும் சேர்ந்து சீதையைக் கொண்டுபோய் வேளச்சேரி வீனஸ் காலனில விட்டுடாங்க.. அவ்ளோதான்” என சின்னச் சிரிப்புடன் சரித்ரா கதையை முடித்தாள்.
மிகவும் அமைதியாக முதல்வர் கேட்டார் “ஏம்மா,, சீதையை வீனஸ் காலனில கொண்டுபோய் விட்டீங்க”
“ஏன்னா.. அங்கேதான் என் வீடு இருக்கு.. நான்தான் சீதை”.


(இக்கதை கோபிநாத் அவர்கள் எழுதிய “பாஸ்வேர்டு” நூலில் உள்ளது. விகடன் பிரசுரம். இது நூலுக்காக எழுதப்பட்ட கதையா அல்லது உண்மையா எனத் தெரியவில்லை. ஒருவேளை உண்மைச் சம்பவமாக இருந்தால் இப்போது அந்தக் குழந்தையை காணவேண்டும். அதே அறிவு, புத்திசாலி, கதைசொல்லும் பழக்கத்துடன் உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும். ஆங்கில வழிப் பள்ளியில் படித்திருந்தால் வாய்ப்பில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும்.)