Thursday, December 16, 2010

நல்ல பொழுதையெல்லாம்

நல்ல பொழுதையெல்லாம்...



ருவருக்கு எத்தனை பொழுதுபோக்குகள் வேண்டுமானாலும் இருக்கலாம். அது அவரவர் திறமையையும் ஆர்வத்தையும் பொறுத்தது. எனக்கு இளமை நாட்களில் சில பொழுதுபோக்குகள் இருந்தன.

புத்தகம் படித்தல், அஞ்சல்தலை சேகரித்தல், வாழ்த்து அட்டைகள் சேகரித்தல், பழைய நாணயங்களைச் சேகரித்தல், ஓவியம் வரைதல், வானொலி கேட்டல், பேனா நண்பர்களுக்குக் கடிதம் எழுதுதல் ஆகியவையே அவை. இவற்றில் புத்தகம் படிப்பதே முதன்மையானது!
நான் ஆம்பூர் அருகில் உள்ள தேவலாபுரம் அரசினர் உயர் நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது, திரு. சுப்பிரமணி என்பவர் எனக்குத் தமிழாசிரியராக இருந்தார். அவரின் மகன் வினாயகமும்கூட அப்போது எங்களுடன் அதே வகுப்பில் படித்தான். அந்த ஆசிரியர் எல்லோரிடமும் ஒரே மாதிரியான கண்டிப்புடன் நடந்துகொள்வார். ஒவ்வொரு விடுமுறையின்போதும் அவர் எங்களிடம், ஏதாவது ஒரு நூலைப் படித்து வரும்படிச் சொல்வார்.

வகுப்பில் எல்லோருக்கும் முன்னால் நான் பாராட்டுப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக நான் ஊரில் உள்ள நூலகத்திற்கு ஓடுவேன்! அப்படி உருவானதுதான் என் புத்தக வாசிப்புப் பழக்கம். அந்தப் பழக்கம்தான் இன்று என்னை ஒரு எழுத்தாளனாக ஆக்கியிருக்கிறது. என்னை புத்தகங்கள் படிக்குமாறு ஓர் ஆசிரியர் சொன்னதுபோல, உங்களிடமும் யாராவது சொல்லியிருக்கலாம். உடனே அந்த நல்ல செயலை தட்டாமல் மேற்கொள்ளுங்கள்.
அஞ்சல் தலைகளை சேகரிப்பது எனக்கு ஆர்வமூட்டுவதாக இருந்தது. உங்களுக்கும் அது, அதே உணர்வைத் தரும். எங்கள் ஊரில் ஒரு தொண்டு நிறுவனம் இயங்கி வந்தது. அதற்கு வெளிநாடுகளிலிருந்து நிறையக் கடிதங்கள் வரும். அந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரிடம் சொல்லி அந்தக் கடித உறைகளை வாங்கிக்கொள்வேன்.

அந்த உறைகளில் இருக்கும் அஞ்சல் தலைகளைப் பிரித்து எடுத்துச் சேகரிப்பேன். வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையின் உள்ளே இருக்கும் கடையொன்றில் பலநாட்டு அஞ்சல் தலைகளை விற்பார்கள். சில புத்தகக் கடைகளிலும்கூட அஞ்சல் தலைகள் கிடைக்கும். அவற்றை வாங்கி வந்து தொகுப்பு நோட்டில் ஒட்டுவேன்.
உங்களுக்கு அஞ்சல் தலை சேகரிப்பில் ஆர்வம் இருந்தால், இதுபோன்ற சில தொடர்புகள் மூலம் அவற்றைப் பெறலாம். மாவட்ட தலைமை அஞ்சலகங்களில்கூட அஞ்சல் தலை சேகரிப்பாளர்களுக்கென்று தனியே தபால் தலைகளை விற்பனை செய்கிறார்கள்.

பலநாட்டு அஞ்சல் தலைகளை வகை பிரித்து பல்வேறு தலைப்புகளின் கீழே சேகரிக்கலாம். விலங்குகள், பூக்கள், வாகனங்கள், விளையாட்டுபோன்ற தலைப்புகளிலோ, தலைவர்களின் படங்களைக்கொண்ட அஞ்சல் தலைகளாகவோ சேகரிக்கத் தொடங்கினால் சுவாரஸ்யமாக இருக்கும். இதன் மூலம் பல நாடுகளைக் குறித்தும், தலைவர்களைக் குறித்தும் அறியலாம். பொது அறிவு பெருகும்.
வாழ்த்து அட்டைகளைச் சேகரிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது. இன்று கடிதம் எழுதும் பழக்கமும், வாழ்த்து அட்டைகளை அனுப்பும் பழக்கமும் குறைந்துவிட்டன. இதுபோன்ற சூழலில் வாழ்த்து அட்டைகளைச் சேகரிப்பது உங்களுக்கு பரபரப்பான அனுபவமாகக்கூட இருக்கும்.

உலகிலேயே இங்கிலாந்து மக்கள்தான் வாழ்த்து அட்டைகளை அனுப்புவதற்கு அதிகமாகச் செலவு செய்கின்றனர். ஒரு ஆண்டுக்கு அந்த மக்கள் ஒரு பில்லியன் பவுண்ட் பணத்தைச் செலவிடுகின்றனர். வெளிநாட்டினர், பண்டிகை காலத்திற்கு மட்டும்தான் வாழ்த்து அனுப்புவது என்றில்லாமல், விடுமுறை நாட்களைக் கழிக்கவும், பயணங்கள் சிறக்கவும்கூட வாழ்த்து அட்டைகளை அனுப்புகிறார்கள். ஹால் மார்க் (ஏஅகக ஙஅதஓ) நிறுவனம்தான் உலகிலேயே அதிக அளவில் வாழ்த்து அட்டைகளை அச்சிடுகிறது.

ஆனால், தொடக்க காலத்தில் வாழ்த்து அட்டைகள் ஓவியர்களால் கையால் வரையப்பட்டே தயாரிக்கப்பட்
டனவாம்! பின்னர், மர அச்சு செய்துகூட அச்சிட்டிருக்கிறார்கள். உலகின் முதல் வாழ்த்து அட்டை, "ஜான் கால்காட் ஹார்ஸ்லி' என்பவரால், அவரின் நண்பர் "ஹென்றி கோலி'க்கு அனுப்பப்பட்டதாகும். இந்த வாழ்த்து அட்டை கிறிஸ்துமஸýக்காக அனுப்பப்பட்டது.
வாழ்த்து அட்டைகளிலும் பல வகையான ஓவியங்கள் இடம் பெறுகின்றன. பூக்கள், இயற்கைக் காட்சிகள், உழைக்கும் மக்களின் ஓவியங்கள், பறவைகள் என எண்ணற்ற ஓவியங்கள் வாழ்த்து அட்டைகளிலேயே இருக்கின்றன. மதம் சார்ந்த பண்டிகைகளுக்கு அனுப்பப்படும் வாழ்த்து அட்டைகளிலோ பல கடவுளரின் படங்கள் இருக்கின்றன.

இவற்றையெல்லாம் சேகரித்து, சிறிய சிறிய பெட்டிகளில் வகை பிரித்து போட்டு வைக்கலாம். ஓய்வு நேரங்களில் அவற்றை எடுத்துப் பார்த்தால், வண்ணமிகு உலகுக்குள் பயணம் செய்து வந்த அனுபவம் கிடைக்கும். இப்போது, புகைப்படங்களையே வாழ்த்து அட்டைகளாக அச்சிடும் முறையும் வந்துவிட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் படங்கள் அஞ்சல் அட்டைகளாகக்கூட கிடைக்கின்றன. 3ஈ அட்டைகள், பாடும் அட்டைகள் (திறந்தவுடன் பாடல் ஒலிக்கும்!) என வகை வகையாக இன்று வாழ்த்து அட்டைகள் வந்துவிட்டன.

வாழ்த்து அட்டைகளில் வரையப்பட்டிருக்கும் படங்களை நாம் தொட்டு உணர்வதற்கு ஏற்ற வகையில், மேலெழும்பி இருக்கும்படி அச்சிடுவதும் உண்டு. சில அட்டைகள் வெல்வெட் துணியாலோ, மினுமினுக்கும் பொருட்களாலோ அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். சில வாழ்த்து அட்டைகள், அற்புதமான நறுமணத்தைக்கொண்டதாகவும் இருக்கும். இப்படியான பலவகை வாழ்த்து அட்டைகளைச் சேகரிப்பதால் நம் மனம் எப்போதும் மகிழ்ச்சியில் பொங்கும்.

நான் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு வித்தியாசமான பொழுதுபோக்கைக் கொண்டிருந்தேன். நாட்டில் இருக்கும் முக்கியமான தலைவர்களை, அறிஞர்களை ஓவியமாக வரைவது. அந்த உருவப் படங்களை அவர்களுக்கு அனுப்பி, அதில் அவர்களின் கையெழுத்தைப் பெற்றுப் பாதுகாப்பது. இந்தப் பொழுதுபோக்கு செலவுபிடிக்கிற ஒன்று. அதனால், நீண்ட நாட்களுக்கு இதை என்னால் செய்ய முடியவில்லை. படங்களை வரைய அட்டைகளையும், வரையும் பொருட்களையும் வாங்கும் செலவையும், அஞ்சல் செலவையும் உங்களால் சமாளிக்க முடியும் என்றால், நீங்களும் இதை முயன்று பார்க்கலாம்.

இந்தப் பொழுதுபோக்கின் மூலம் நான் அடைந்த பயன்கள்பல. ஓவியம் வரையக் கற்றுக் கொண்டேன். அந்த உருவப் படங்களை தலைவர்களுக்கு அனுப்ப வேண்டும் அல்லவா? அதனால், கடித உறைகளைச் செய்யக் கற்றுக்கொண்டேன். தலைவர்களுக்கு கடிதத்தோடுதானே அந்தப் படங்களை அனுப்ப வேண்டும்?! எனவே, ஆங்கிலத்திலும் தமிழிலும் கடிதம் எழுதக் கற்றுக்கொண்டேன். இவற்றைப்போல முக்கியமான வேறொரு பலனும் இந்தப் பொழுதுபோக்கால் ஏற்பட்டது. அது என்னவென்றால், நாளேடுகளைப் படிப்பது! தலைவர்களின் முகவரிகளை, அவர்களைப் பற்றிய செய்திகளிலிருந்துதான் நான் எடுப்பேன். ஒரு பொழுதுபோக்கால் எத்தனை பயன்கள் பார்த்தீர்களா? இப்படி ஏதாவது ஒன்றை உங்களால் செய்ய முடியும் அல்லவா?

உங்கள் ஓய்வு நேரத்தைக் கணக்கிடுங்கள். பொழுதுபோக்கு ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். காலத்தைப் பயனுள்ள முறையில் செலவிடுங்கள்!
நன்றி : சிறுவர் மணி

Saturday, December 11, 2010

பாபுவின் தன்னம்பிக்கை

இளம் படைப்பாளி: 
பாபுவின் தன்னம்பிக்கை



சிறுவயது முதலே பாபு, படு சுட்டிப் பையனாக இருந்தான். அவன் அப்பா ஒரு தமிழாசிரியர். வீட்டிற்கு ஒரே பிள்ளை பாபு. அதுவும் செல்லப் பிள்ளை. அப்பாவோடுதான், அவரது வாகனத்தில் பள்ளிக்குச் செல்வான். ஏனென்றால், அப்பா வேலை செய்யும் பள்ளிக்கூடத்தில்தான் அவனும் படித்தான். ஒரு நாள் பாபு தன் அப்பாவிடம் ஒரு சைக்கிள் வேண்டுமென்று கேட்டான்.

""உனக்கு எதற்கு இப்போது சைக்கிள். நான்தான் என் வண்டியில் உன்னை பள்ளிக்கு அழைத்துச் சென்று திரும்பவும் அழைத்து வருகிறேனே! சைக்கிள் இருந்தாலும் உனக்கு அதை ஓட்டத் தெரியாதே! போய் படிக்கிற வேலையைப் பார்'' என்றார் அப்பா.
பாபு சொன்னான்: ""நானே சைக்கிள் ஓட்டப் பழகிக்குவேன் அப்பா. என்னோட நண்பர்கள் எல்லோருமே சைக்கிள் வைத்திருக்கிறார்கள் அப்பா.''

""வேண்டாம், வேண்டாம்! சைக்கிளைப் போட்டுக்கொண்டு எங்காவது விழுந்துவிடுவாய். உடலில் காயம்பட்டுவிடும். பக்கத்து வீட்டுப் பையன் ராகுலைப் பார்த்தாயா, அவன் உன்னைவிடப் பெரியவன். அவன் சைக்கிள் ஓட்டப் பழகுவதற்கே பல மாதங்கள் ஆயின. அதுவும் ஆள் வைத்துதான் அவன் கற்றுக்கொண்டான். நீ மேல் வகுப்பிற்குப் போன பிறகு சைக்கிள் வாங்குவதைப் பற்றி யோசிக்கலாம். இப்போது வேண்டாம். உன்னால் ஓட்ட முடியாது. நீ சின்னப் பையன்.''அப்பா மறுத்தார்.
இதையெல்லாம் சமையல் அறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த பாபுவின்
அம்மா, ""பாபு, அப்பா சொல்வதைக்
கேள்!'' என்றார்கள். பாபு வருத்தமடைந்தான். ""போம்மா, நான் நன்றாக சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வேன். நான் ஒன்றும் சின்னப் பையன் இல்லை. ஏழாம் வகுப்புப் படிக்கிறேன்'' என்றான். பிறகு, அவன் உள்ளே சென்று ஒரு பத்திரிகையை எடுத்து வந்து, அதில் வெளியாகியிருந்த சைக்கிள் விளம்பரத்தைக் காட்டிக் கேட்டான்:

""இந்த சைக்கிள்தான் அம்மா எனக்கு வேண்டும். பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள்!''
அப்பா அந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு,""இந்த சைக்கிள் மிகவும் உயரமாக இருக்கிறதே, உன் உயரத்திற்கு பெடல் எட்டாதுபோலிருக்கிறதே!'' என்றார். பாபு எதுவும் பேசவில்லை. சோர்ந்த முகத்துடன் படுக்கச் சென்றுவிட்டான். மகனின் ஆசையை நிராகரிப்பதற்கு அப்பாவுக்கு முடியவில்லை. பாபு மிகவும் ஆசைப்பட்டுக் கேட்கிறானே என்று அடுத்த நாளே அந்த சைக்கிளை வாங்கிக்கொண்டு வந்துவிட்டார்.
சைக்கிளைப் பார்த்ததும் பாபுவால் தன் சந்தோஷத்தை அடக்க முடியவில்லை. அப்பாவுக்கு நன்றி சொன்னான். அவனது மகிழ்ச்சியைப் பார்த்து அப்பா புன்னகைத்தார். அம்மா,சற்றே பதற்றத்துடன் ""சைக்கிள் ஓட்டப் பழகுறேன்னு எங்காவது விழுந்துடாதேப்பா!'' என்றார்கள். அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.

அவன் தன் வீட்டைவிட்டு சற்றுத் தொலைவு சென்று சைக்கிளில் ஏற முயற்சித்தான். "தொப்'பென்று கீழே விழுந்தான். அந்த வழியாக வந்துகொண்டிருந்த ராகுல், பாபுவைப் பார்த்து ஏளனமாகச் சிரித்துச் சொன்னான்: ""ஓட்டத் தெரியாத உனக்கு எதுக்குடா இந்த சைக்கிள்? வீண் வேலை பார்க்காதே!''
பாபு கோபத்துடன் பதில் சொன்னான்: ""நான் உன்னைப்போன்றவன் அல்ல. நீ ஆள் வைத்துதான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டாய். நான் எவர் உதவியுமின்றி என் சொந்த முயற்சியிலேயே கற்றுக்கொள்வேன்.''

""போடா பொடிப்பயலே! உன்னால அது முடியாதுடா!'' என்று ராகுல் அலட்சியமாகக் கூறினான்.
பாபு தினமும் சைக்கிள் ஓட்டப் பழகினான். சைக்கிளுடன் விழுந்ததால் அவன் உடலில் தினமும் காயங்களும், சிராய்ப்புகளும் ஏற்பட்டன. அவன் அம்மா அந்தக் காயங்களுக்கு மருந்து தடவினார்கள். ""இனி சைக்கிளை எடுக்காதே'' என்று கண்டித்தும் பார்த்தார்கள். அப்பாவும் இவனுக்கு சைக்கிள் வாங்கிக்கொடுத்தது தவறுதானோ என்று யோசிக்கத் தொடங்கினார். பெரிதாக ஏதும் அடி பட்டுவிட்டால் என்ன செய்வது என்று அவருக்குக் கவலை.

நாட்கள் சென்றன. தன் முயற்சியைக் கைவிடவில்லை பாபு. எத்தனை முறை விழுந்தாலும், மீண்டும் மீண்டும் பயிற்சியைத் தொடர்ந்தான். சைக்கிள் ஓட்டி விழுவதால் ஏற்படும் காயங்கள் குறையத் தொடங்கின. கடைசியில் அந்த நாள் வந்தது.

அன்று, அலட்சியமாக சைக்கிள் ஓட்டி வந்த பாபு, தன் வீட்டின் முன்னால் நிறுத்திவிட்டு கம்பீரமாக உள்ளே சென்றான். பாபு, சர்வ சாதாரணமாக சைக்கிள் ஓட்டி வந்ததைப் பார்த்த அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அளவற்ற மகிழ்ச்சி!

அதற்கடுத்த மாதம் அந்த ஊரில் நடந்த சைக்கிள் போட்டியில் முதல் பரிசை வென்றது பாபுதான் என்று சொன்னால் வியப்பாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. பாபுவைக் கேலி செய்த ராகுல் தோற்றுவிட்டான். தான் கேலி செய்ததற்காக அவன் பாபுவிடம் மன்னிப்புக் கேட்டான். அவனது தவறைப் பொருட்படுத்தாமல் மீண்டும் தன் நண்பனாக ஏற்றுக்கொண்டான் பாபு.                                                                  நன்றி : சிறுவர் மணி

Tuesday, November 30, 2010

கவிஞர் இசாக் பள்ளிக்கு வருகை






கவிஞர் இசாக்தீன் தனது நண்பர்களுடன் பள்ளிக்கு வருகை

Monday, November 29, 2010

முதன்மை கல்வி அலுவலர் பங்கேற்ற விழா





தமிழக அரசின் அனைவருக்கும் கல்வித்திட்டத்திற்கான விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார்.  அவருடன் ஒலக்கூர் ஒன்றிய தொடக்கக் கல்வி அலுவலர் திரு அப்பண்டராஜன் அவர்களும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இவ்விழாவின்போது மதிய உணவு திட்டத்திற்கான புதிய அறைகளையும், செயல்வழிக் கற்றலையும் தொடங்கி வைத்து கருத்துரைகள் வழங்கினார் முதன்மைக் கல்வி அலுவர் திரு.பன்னீர்செல்வம் அவர்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

Wednesday, October 20, 2010

ஆண்டறிக்கை 2009-2010

தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி
உரோசனை-திண்டிவனம்

ஆண்டறிக்கை 2009-2010

மக்களுக்காக மக்களால்... சமூகத்திற்கு நன்மை பயப்பதும், அறிவு வளர்ச்சிக்கும், ஆளுமை மேம்பாட்டுக்கும் ஏற்றதும், குழந்தைக்கு தாய்ப்போல் போன்றதுமான தாய்மொழி வழிக்கல்வியை அளிப்பதற்காக 2000&ஆம் ஆண்டில் சிறிய கொட்டகையில், 21 குழந்தைகளுடன் தொடங்கப்பட்டது இந்தத் தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி. 10&வது ஆண்டு விழாவைக்கொண்டாடுகிற, இன்று, ‘‘மக்களால்.. மக்களுக்காக... மக்களைக் கொண்டு .. ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடம் & இலவசக் கல்வி; இலவச மதிய உணவு, நடத்துவது அரசு அல்ல, மக்கள்’’ என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தச் சிறப்புகளுக்கு எல்லாம் காரணமான உங்களை நன்றியோடு நினைத்துப்பார்கின்றோம். பெற்ற பெருமைகளை உங்களுக்கு அர்ப்பணிக்கின்றோம்.
தாய்த்தமிழ் பள்ளி வழங்கும் கல்வியின் வழியாகவும், பயிலும் குழந்தைகளின் மூலமும் உரோசனையில் புதியதொரு தலைமுறை வளர்ந்து வருவதை மகிழ்வோடும், மன நிறைவோடும் பாராட்டுகின்றோம்.

பள்ளி வளர்ச்சியும், கல்வி முன்னேற்றமும் : அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி வகுப்பறையாக சிறந்த கட்டிடங்கள், சுத்தமான குடிநீர், போதிய விளையாட்டு மைதானம், சுகாதாரமான கழிப்பிடம், முழுமைக்குமான சுற்றுச்சுவர் என தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது பள்ளி.
கற்றலில் இனிமையுடனும், செயல்வழிக் கற்றலின் நோக்கத்தோடும், பின்னிலைக் குழந்தைகளும் முழுமையான கல்வியைப் பெற தனிக் கவனம் செலுத்தியும் கற்பித்தல் செய்யப்படுகின்றது. குழந்தைகள் எந்தவிதத் தயக்கம், கூச்சம் இல்லாமல் இயல்பாகப் பேசியும், பழகியும் சுதந்திரமாக இருப்பதை எல்லோரும் காணலாம். குழந்தைகளின் இந்த இயல்பு நிலையினை மேலும் வளர்த்தெடுக்கும் விதமாகவே நாங்கள் கல்வியினை அளித்து வருகின்றோம்.

பள்ளி வளர்ச்சியில் பெற்றோர்கள் முழுமையான ஈடுபாடு : பள்ளியும், மாணவர்களும் சேர்ந்துள்ளளதைப் போன்றே, பெற்றோர்களும் பிரிக்க
முடியாதபடிக்கு பள்ளியுடன் இணைந்துள்ளார்கள். கல்வியாண்டில் 9 பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடத்தியுள்ளோம். ஒவ்வொரு கூட்டத்திலும் பெற்றோர் ஆசிரியர் கழகமும், நிர்வாகமும் பள்ளி வளர்ச்சி, கல்வி முன்னேற்றம் குறித்து கூடிப்பேசி செயலாற்றி வருகிறோம். பள்ளியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் உங்களைப்போன்றே, எங்கள் பெற்றோர் ஆசிரிய கழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
பிள்ளைகளின் கல்விச் சுற்றுலா : பொழுதினைப் போக்கும் சுற்றுலாவாக இல்லாமல், கற்கின்ற பருவத்தில் புதியவைகளை தெரிந்துகொள்ளும் வகையில், இந்தக் கல்வியாண்டில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியில் பூங்காவில் உள்ளவைகளை பார்த்துப் பிள்ளைகள் பெரிதும் பயன்பெற்றனர்.

கல்வி அலுவலர்கள் பார்வையிடல் : ஒலக்கூர் ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள் பலமுறை பள்ளியினைப் பார்வையிட்டு, கற்பிக்கும் ஆசிரியர்களையும், கற்கும் மாணவர்களையும் பெரிதும் பாராட்டி, ஆலோசனைகளை வழங்கியுள்ளார்கள். மேலும், அனைத்து வகுப்பிலும், அனைத்து மாணவர்களும் குறள் சொல்லும் செயல் பெரும் வியப்பிற்குரியது என்று வாழ்த்திப்பேசினார். இரண்டாம் ஆண்டாக நமது பள்ளிக்கு அரசாங்கத்தின் இலவசப் பாட நூல்களை ஆர்வமுடன் வழங்கி வருகின்றார்கள்.


உதவும் அகரம் :பள்ளி வளர்சியில் தொடர்ந்து பங்காற்றி வரும் அகரம் கல்வி அறக்கட்டளை, இந்தக்கல்வியாண்டு தொடங்கிய சூன் மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.5000/& பள்ளிக்கு நன்கொடையாக வழங்கி வருகிறார்கள்.


புதியப் பணியாளர்கள் :இந்தக் கல்வியாண்டில் தலைமை ஆசிரியராக திருமதி தயாளீஸ்வரி, உதவி ஆசிரியராக கா.வ.கன்னியப்பன், சத்துணவு அமைப்பாளராக திரு.சுரேஷ் ஆகியோர் பொறுப்பேற்று பணியாற்றி வருகின்றனர்.


எழுதுப் பொருட்கள் அன்பளிப்புதிண்டிவனம் பால்பாண்டியன் பாத்திரக்கடை, மறைந்த நகர மன்ற உறுப்பினர் திரு.பன்னீர்செல்வம் நினைவாக அவரது குடும்பத்தினர், வெங்கடேஸ்வரா புத்த நிலையம், விஜய் ரசிகர் மன்றம், நகர அ.தி.மு.க ஆகியோர் மாணவர்களுக்கு குறிப்பேடுகளை அன்பளிப்பாக வழங்கினார்கள்.

தலைமைப் பண்பு வளர்த்தெடுப்பு :
காமராசர் பிறந்த நாள், அண்ணா நூற்றாண்டு விழா, பெரியார் பிறந்த நாள், அறிஞர் அம்பேத்கர் பிறந்த நாள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் பள்ளியில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிகளை மாணவத் தலைவர் லாவண்யா தலைமையேற்று வழிநடத்தினார்.
மேலும், குடியரசு தினவிழா, சுதந்திர தினம், குழந்தைகள் தின உள்ளிட்டவைகளும் சிறப்பு அழைப்பாளர்களுடன் கொண்டாடப்பட்டது.

சிறப்புப் பார்வையாளர்கள் :•சென்னை, பேராசிரியர் சிவக்குமார், பெரிய திரையில் அறிவியல் படங்களைக் காண்பித்து வானியல் தொடர்பான பாடங்களை நடத்தினார்.
•மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளி தாளாளரும், பெரியார் திராவிடர் கழகத் தலைவருமான திரு.கொளத்தூர் மணி அவர்கள் பார்வையிட்டு, ஆசிரியர்களுடன் உரையாடி வாழ்த்தினார்.
•பெரியார் திராவிட தமிழர் பேரவை அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பள்ளியினைப் பார்வையிட்டு, கல்வி மற்றும் தமிழ் பணிக்கான காலத்திற்கேற்ற உழைப்பு என்று கூறிச்சென்றார்.

இலவயப் பயிற்சி :பள்ளி தொடங்கிய பல ஆண்டுகள் நடைபெற்ற இலவயப் பயிற்சி இடையில் சில ஆண்டு நடத்த முடியாமல் போனது. இந்த ஆண்டு, பெலாகுப்பம் அன்புக் கரங்கள் அமைப்பினர் 10&ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசப் பயிற்சியினை அளித்தார்கள்.

தமிழகத்திற்கு அடையாளப்படுத்திய புதிய தலைமுறை :
‘‘புதிய தலைமுறை’’ இதழ் நமது பள்ளியை ‘‘மக்களால்.. மக்களுக்காக... மக்களைக் கொண்டு .. ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடம் & இலவசக் கல்வி; இலவச மதிய உணவு, நடத்துவது அரசு அல்ல, மக்கள்’’ என்று தலைப்பிட்டு அட்டைபடக்கட்டுரையாக 6 பக்கங்களில் வெளியிட்டு பள்ளியினைப் பரவலாக்கினார்கள்.
இப்படியும் பள்ளி நடத்தலாம் என்பதையும், இப்படி ஒரு பள்ளியினை எப்படியாவது நடத்தவேண்டும் என்றும் பல்வேறு இளைஞர்களுக்கு ஆர்வத்தையும், தமிழ் மீதான அக்கறையையும் நமது பள்ளி உருவாக்கியுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவிக்கின்றோம். இதுவே நமது கடமையாகவும் நினைக்கின்றோம்.

மதிய உணவு : அரசின் உதவியின்றி இலவயக் கல்வியினை அளிப்பது போன்று, உங்கள் அனைவரின் உதவியுடனும் பிள்ளைகளுக்கான மதிய உணவினையும் இலவயமாக கடந்த 3 ஆண்டுகளாக வழங்கி வருகின்றோம். புதிய தலைமுறை இதழ் கண்டு இத்திட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் சுமார் 55 பேர் மதிய உணவு வழங்கியுள்ளார்கள்.

எதிர்வரும் காலங்களில்...• புதிய கட்டிடங்கள் திறப்பு விழா.
•6- வகுப்பினைத் தொடங்கி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவது.
•எல்லோரும் பயன்பெறும் குழந்தைகளுக்கான நூலகம்.
•போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் ‘‘கல்வி வழிகாட்டி பயிற்சி மையம்’’.
உள்ளிட்டவைகளை உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடும் உருவாக்குவோம்.
கற்கின்ற கல்வி ஒரு தலைமுறைக்கு வழிகாட்டுகின்றது.
நமது தாய்த் தமிழ் மழலையர் (ம) தொடக்கப்பள்ளி பல தலைமுறைகளை உருவாக்குகின்றது.