Tuesday, November 8, 2011

வண்டிக்காரக் காவலர்

வண்டிக்காரக் காவலர்

பெருமாள் பெத்தபுள்ள


பேரெடுத்து வளர்ந்த புள்ள


நீ பெத்தது நாலு புள்ள.


ரெண்ட கரசேத்த.


ரெண்ட கரசேக்காம


நீ


கரதேடி போயிட்டியே.


அதிகாலையில


வண்டி பூட்டி.. போயி வந்து..


களைப்பார மாட்ட கட்டி


உடனே பள்ளிக்கு நீ வந்து


உன் பாதத்தை பதிச்சுடுவ..


பள்ளிக் குப்பைகளை


நீ வந்து கூட்டிடுவ


அடுத்த வேல இன்னானு


எடுத்துக் கட்டி செஞ்சிடுவ

சுட்டெரிக்கும் வெயிலும்


நீ சட்டத் துணி போட்டதில்ல


நீ இருக்கும்போது


எந்த பொருள் கேட்டாலும்


இங்க இருக்கு


அங்க இருக்குன்னு


எடுத்து வந்து தந்திடுவ!


இப்போ


எந்தப் பொருள்


எங்க இருக்கு


எங்களுக்கு தெரியலையே!


யார் எந்த வேலையை


எப்படிச் சொன்னாலும்


மறுக்காம செஞ்சிடுவ!


யார் என்ன சொன்னாலும்


மனசுக்குள்ள வச்சிகிட்டு


முகம் சுளிக்காம


நடந்துக்குவ!

நீ


தண்ணி ஊத்தி


வளர்த்த மரம்


பள்ளியெல்லாம்


தளதளன்னு நிக்குதய்யா!

எங்க


நெஞ்சமெல்லாம்


உன் நினைப்பு


தினம்


வந்து வந்து நிக்குதய்யா!


கவிதை ஆக்கம்.

-கா.வ.கன்னியப்பன்,
ஆசிரியர்,

தாய்த் தமிழ்ப் பள்ளி

பள்ளிக் காவலர் பெ.அர்ச்சுனன் மறைவு

சுமார் 7 வயதுக் குழந்தையாக இருக்கும்போதே, பிறந்த பெலாகுப்பம் கிராமத்தை விட்டுவிட்டு திண்டிவனம் ரோசனைப் பகுதிக்கு வந்துள்ளார். சாப்பாட்டிற்காக கூப்பிடுகின்ற வீட்டில் எல்லாம் மாடு மேய்த்துக் கொடுத்துள்ளார். பிறகு, கிடைக்கின்ற அன்றாடக் கூலி வேலைக்கும் சென்றுள்ளார்.


திண்டிவனம் வட்டம், பெலாகுப்பம் கிராமத்தில் பெருமாள்-சின்னப்பாப்பா தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே தாயை இழந்த நிலையில், வேலை தேடி ரோசனை வந்துள்ளார். இவரின் ஓய்வறியாத கடுமையான உழைப்பையும், நல்ல குணத்தையும் பார்த்த, நெற்குணம் நடேசன் தனது மகள் யசோதை அம்மாளை திருமணம் செய்துகொடுத்தார்.

சொந்தமாக உழைத்து முன்னேற மனைவியின் பெற்றோர் உதவியுடன் மாடும், வண்டியும் வாங்கியுள்ளார். மாட்டையும், வண்டியும் உயிர்போல நேசித்தார். உயிர் போகும்வரை உழைத்துக்கொண்டே இருந்தார்.

பள்ளி தொடங்கும்போது, அருகிலேயே இருந்து மிகப்பொறுப்பாய் பள்ளியிலிருந்த கட்டுமானப் பொருட்களைப் கண்காணித்துக் கொண்டிருந்தார். பாதுகாப்பது, வேலைகளைச் செய்து முடிப்பது உள்ளிட்டவைகளிலும், பள்ளியின் மீதும், அவருக்கிருந்த அக்கறை ஈடுபாட்டின் காரணமாக அவர் பள்ளிக்குக் காவலராக நியமனம் செய்யப்பட்டார்.

பள்ளி தொடங்கி ஒவ்வொரு நாளும் இவரின் காலடி படாமல் பள்ளி மூடப்பட்டதுமில்லை, திறந்ததுமில்லை. இவரின் அனுமதியில்லாமல், பார்வையில் படாமல் பள்ளியில் எந்தவொரு பொருளும் இடம் மாறியதில்லை.

கடந்த ஆண்டு பள்ளியில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் அனைத்துப் பணிகளுக்கும் உடனிருந்து ஒத்துழைத்தார். எல்லோருக்கும் எல்லா வேலைகளையும் செய்தார். விழா முடிந்த மறுநாள் உடல் நிலை சரியில்லாமல் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர். 10.05.2011 அன்று அங்கேயே மரணமடைந்தார். எவரும் எதிர்பார்க்காத, ஏற்றுக்கொள்ள முடியாத மரணம்.

செல்வம், ரமேஷ், செந்தில் என்கிற மூன்று மகன்கள், வாசுகிசுதா என்கிற ஒரே மகள் இவருடைய பிள்ளைகளாகும். இரு மூத்த மகன்களும் திருமணமாகி தனிக் குடும்ப வாழ்க்கை வாழ்கின்றனர். திருமணமாகாத மகன் செந்தில்(27), மகள் வாசுகிசுதா(24), உடல் நிலை சரியில்லாத மனைவி யசோதயம்மாள் ஆகியோர் தனியாக வாழ்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பள்ளியில் தினம் தினமும், நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் காவலரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நம்முடன் கலந்துறவாடி இருக்கின்றார்கள். ஒவ்வொரு நாளும் கூலி வேலை செய்து, குடும்பத்தைக் காப்பாற்றி, வளர்த்து வந்த மாபெரும் உழைப்பாளி. இவரின் எதிர்பாராத மரணத்தால் குடும்பமும் மிகுந்த கவலையுடன் வாழ்ந்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் உழைத்து உழைத்து குடும்பத்தைப் பாதுகாத்து, பள்ளியிலும் காவலராய்ப் பணியாற்றி, திடீரென மறைவுற்றது அவரது குடும்பத்திற்கும், பள்ளிக்கும் ஈடு செய்யமுடியாத இழப்பு. 

Friday, May 27, 2011

10-வது தேர்வு - தாய்த்தமிழ் பள்ளி சாதனை

தாய்த்தமிழ் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்று, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்கள் முதல் குழுவிறாக தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
தாய்த்தமிழ் பள்ளியில் பயின்ற மாணவி அகிலா மொத்தம் 489 மதிப்பெண்கள் பெற்று திண்டிவனம் கல்வி வட்டத்தில் முதல் மாணவியாகவும்,  விழுப்புரம் மாவட்ட அளவிலான அரசுப்பள்ளிகளில் இரண்டாம் இடமும் பெற்று, அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைப்பார்கள் என்பதை நிருபித்துள்ளார்.
மதிப்பெண்கள் :
தமிழ் - 96
ஆங்கிலம் - 97
கணிதம் 100
அறிவியல் 99
சமூக அறிவியல் 97
மொத்தம் 489

Saturday, March 5, 2011

கல்வி முகாம்


திண்டிவனம் உரோசனை தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில்  ‘‘எழுமின் விழுமின் 2011’’ என்கிற கல்வி சிறப்பு முகாமின் நிறைவு விழா 27.02.2011 அன்று மாலை நடைபெற்றது. மருத்துவம், பொறியியல் படிக்கின்ற மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ள அரோரா அறக்கட்டளை மூலம் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இந்த சிறப்பு கல்வி முகாமினை 26, 27 ஆகிய இரண்டு நாட்களும் நடத்தினார்கள். 26&ஆம் தேதி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவிவெப்பமாயல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் திண்டிவனம் நகரில் நடத்தப்பட்டது.
கல்வி முகாமின் நிறைவு விழா 27.02.2011 அன்று மாலை பள்ளியில் நடைபெற்றது. அரோரா அறக்கட்டளை உறுப்பினர் பாலாஜி வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் திரு.சண்முகம் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மேலும், திண்டிவனம் கல்வி மாவட்ட ஆய்வாளர் திரு.ராமகிருஷ்ணன், நகர மன்ற மற்றும் பள்ளி அறக்கட்டளை உறுப்பினருமான வழக்கறிஞர் மு.பூபால், விழுப்புரம் ராமகிருஷ்ணா மேனிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திரு.மோகனசுந்தரம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மனோகரன், அரிமா தனபால், ஓய்வு பெற்ற ஆசிரியர் மான்.கு.ஏழுமலை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிள்ளிவளவன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பேச்சுப்போட்டி, திருக்குறள், ஓவியம். பாடல் ஒப்புவித்தல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவர் திரு.சண்முகம் பரிசுகளை வழங்கினார். மேலும், பள்ளி அறக்கட்டளை உறுப்பினர்கள் வடிவேல், விஸ்வதாஸ், பாலகிருஷ்ணன் உள்ளிடோருடன் சுமார் 300&க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், ரோசனை பகுதி மக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அரோரா அறக்கட்டளை செயலாளர் நவீன்குமார் எழுமின் விழுமின் 2011 கல்வி முகாம் குறித்தும், அறக்கட்டளை தொடங்கிய விதம், நோக்கம் குறித்தும் பேசினார். பள்ளி உதவி ஆசியர் கார்திக், இரண்டு நாள் முகாமில் மாணவர் கற்றுக்கொண்டவைகள் குறித்துப் பேசினார். பள்ளி மேலாளர் முருகப்பன் தாய்த்தமிழ் கல்வி முக்கியத்துவம் குறித்துப் பேசினார். அரோரா அறக்கட்டளை உறுப்பினர் மேகநாதன் நன்றியுரை கூறினார்.