தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி
உரோசனை-திண்டிவனம்
ஆண்டறிக்கை 2009-2010
மக்களுக்காக மக்களால்... சமூகத்திற்கு நன்மை பயப்பதும், அறிவு வளர்ச்சிக்கும், ஆளுமை மேம்பாட்டுக்கும் ஏற்றதும், குழந்தைக்கு தாய்ப்போல் போன்றதுமான தாய்மொழி வழிக்கல்வியை அளிப்பதற்காக 2000&ஆம் ஆண்டில் சிறிய கொட்டகையில், 21 குழந்தைகளுடன் தொடங்கப்பட்டது இந்தத் தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி. 10&வது ஆண்டு விழாவைக்கொண்டாடுகிற, இன்று, ‘‘மக்களால்.. மக்களுக்காக... மக்களைக் கொண்டு .. ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடம் & இலவசக் கல்வி; இலவச மதிய உணவு, நடத்துவது அரசு அல்ல, மக்கள்’’ என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தச் சிறப்புகளுக்கு எல்லாம் காரணமான உங்களை நன்றியோடு நினைத்துப்பார்கின்றோம். பெற்ற பெருமைகளை உங்களுக்கு அர்ப்பணிக்கின்றோம்.
தாய்த்தமிழ் பள்ளி வழங்கும் கல்வியின் வழியாகவும், பயிலும் குழந்தைகளின் மூலமும் உரோசனையில் புதியதொரு தலைமுறை வளர்ந்து வருவதை மகிழ்வோடும், மன நிறைவோடும் பாராட்டுகின்றோம்.
பள்ளி வளர்ச்சியும், கல்வி முன்னேற்றமும் : அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி வகுப்பறையாக சிறந்த கட்டிடங்கள், சுத்தமான குடிநீர், போதிய விளையாட்டு மைதானம், சுகாதாரமான கழிப்பிடம், முழுமைக்குமான சுற்றுச்சுவர் என தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது பள்ளி.
கற்றலில் இனிமையுடனும், செயல்வழிக் கற்றலின் நோக்கத்தோடும், பின்னிலைக் குழந்தைகளும் முழுமையான கல்வியைப் பெற தனிக் கவனம் செலுத்தியும் கற்பித்தல் செய்யப்படுகின்றது. குழந்தைகள் எந்தவிதத் தயக்கம், கூச்சம் இல்லாமல் இயல்பாகப் பேசியும், பழகியும் சுதந்திரமாக இருப்பதை எல்லோரும் காணலாம். குழந்தைகளின் இந்த இயல்பு நிலையினை மேலும் வளர்த்தெடுக்கும் விதமாகவே நாங்கள் கல்வியினை அளித்து வருகின்றோம்.
பள்ளி வளர்ச்சியில் பெற்றோர்கள் முழுமையான ஈடுபாடு : பள்ளியும், மாணவர்களும் சேர்ந்துள்ளளதைப் போன்றே, பெற்றோர்களும் பிரிக்க
முடியாதபடிக்கு பள்ளியுடன் இணைந்துள்ளார்கள். கல்வியாண்டில் 9 பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடத்தியுள்ளோம். ஒவ்வொரு கூட்டத்திலும் பெற்றோர் ஆசிரியர் கழகமும், நிர்வாகமும் பள்ளி வளர்ச்சி, கல்வி முன்னேற்றம் குறித்து கூடிப்பேசி செயலாற்றி வருகிறோம். பள்ளியின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியிலும் உங்களைப்போன்றே, எங்கள் பெற்றோர் ஆசிரிய கழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
பிள்ளைகளின் கல்விச் சுற்றுலா : பொழுதினைப் போக்கும் சுற்றுலாவாக இல்லாமல், கற்கின்ற பருவத்தில் புதியவைகளை தெரிந்துகொள்ளும் வகையில், இந்தக் கல்வியாண்டில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியில் பூங்காவில் உள்ளவைகளை பார்த்துப் பிள்ளைகள் பெரிதும் பயன்பெற்றனர்.
கல்வி அலுவலர்கள் பார்வையிடல் : ஒலக்கூர் ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள் பலமுறை பள்ளியினைப் பார்வையிட்டு, கற்பிக்கும் ஆசிரியர்களையும், கற்கும் மாணவர்களையும் பெரிதும் பாராட்டி, ஆலோசனைகளை வழங்கியுள்ளார்கள். மேலும், அனைத்து வகுப்பிலும், அனைத்து மாணவர்களும் குறள் சொல்லும் செயல் பெரும் வியப்பிற்குரியது என்று வாழ்த்திப்பேசினார். இரண்டாம் ஆண்டாக நமது பள்ளிக்கு அரசாங்கத்தின் இலவசப் பாட நூல்களை ஆர்வமுடன் வழங்கி வருகின்றார்கள்.
உதவும் அகரம் :பள்ளி வளர்சியில் தொடர்ந்து பங்காற்றி வரும் அகரம் கல்வி அறக்கட்டளை, இந்தக்கல்வியாண்டு தொடங்கிய சூன் மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.5000/& பள்ளிக்கு நன்கொடையாக வழங்கி வருகிறார்கள்.
புதியப் பணியாளர்கள் :இந்தக் கல்வியாண்டில் தலைமை ஆசிரியராக திருமதி தயாளீஸ்வரி, உதவி ஆசிரியராக கா.வ.கன்னியப்பன், சத்துணவு அமைப்பாளராக திரு.சுரேஷ் ஆகியோர் பொறுப்பேற்று பணியாற்றி வருகின்றனர்.
எழுதுப் பொருட்கள் அன்பளிப்புதிண்டிவனம் பால்பாண்டியன் பாத்திரக்கடை, மறைந்த நகர மன்ற உறுப்பினர் திரு.பன்னீர்செல்வம் நினைவாக அவரது குடும்பத்தினர், வெங்கடேஸ்வரா புத்த நிலையம், விஜய் ரசிகர் மன்றம், நகர அ.தி.மு.க ஆகியோர் மாணவர்களுக்கு குறிப்பேடுகளை அன்பளிப்பாக வழங்கினார்கள்.
தலைமைப் பண்பு வளர்த்தெடுப்பு :
காமராசர் பிறந்த நாள், அண்ணா நூற்றாண்டு விழா, பெரியார் பிறந்த நாள், அறிஞர் அம்பேத்கர் பிறந்த நாள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் பள்ளியில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிகளை மாணவத் தலைவர் லாவண்யா தலைமையேற்று வழிநடத்தினார்.
மேலும், குடியரசு தினவிழா, சுதந்திர தினம், குழந்தைகள் தின உள்ளிட்டவைகளும் சிறப்பு அழைப்பாளர்களுடன் கொண்டாடப்பட்டது.
சிறப்புப் பார்வையாளர்கள் :•சென்னை, பேராசிரியர் சிவக்குமார், பெரிய திரையில் அறிவியல் படங்களைக் காண்பித்து வானியல் தொடர்பான பாடங்களை நடத்தினார்.
•மேட்டூர் தாய்த் தமிழ்ப் பள்ளி தாளாளரும், பெரியார் திராவிடர் கழகத் தலைவருமான திரு.கொளத்தூர் மணி அவர்கள் பார்வையிட்டு, ஆசிரியர்களுடன் உரையாடி வாழ்த்தினார்.
•பெரியார் திராவிட தமிழர் பேரவை அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பள்ளியினைப் பார்வையிட்டு, கல்வி மற்றும் தமிழ் பணிக்கான காலத்திற்கேற்ற உழைப்பு என்று கூறிச்சென்றார்.
இலவயப் பயிற்சி :பள்ளி தொடங்கிய பல ஆண்டுகள் நடைபெற்ற இலவயப் பயிற்சி இடையில் சில ஆண்டு நடத்த முடியாமல் போனது. இந்த ஆண்டு, பெலாகுப்பம் அன்புக் கரங்கள் அமைப்பினர் 10&ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசப் பயிற்சியினை அளித்தார்கள்.
தமிழகத்திற்கு அடையாளப்படுத்திய புதிய தலைமுறை :
‘‘புதிய தலைமுறை’’ இதழ் நமது பள்ளியை ‘‘மக்களால்.. மக்களுக்காக... மக்களைக் கொண்டு .. ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடம் & இலவசக் கல்வி; இலவச மதிய உணவு, நடத்துவது அரசு அல்ல, மக்கள்’’ என்று தலைப்பிட்டு அட்டைபடக்கட்டுரையாக 6 பக்கங்களில் வெளியிட்டு பள்ளியினைப் பரவலாக்கினார்கள்.
இப்படியும் பள்ளி நடத்தலாம் என்பதையும், இப்படி ஒரு பள்ளியினை எப்படியாவது நடத்தவேண்டும் என்றும் பல்வேறு இளைஞர்களுக்கு ஆர்வத்தையும், தமிழ் மீதான அக்கறையையும் நமது பள்ளி உருவாக்கியுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவிக்கின்றோம். இதுவே நமது கடமையாகவும் நினைக்கின்றோம்.
மதிய உணவு : அரசின் உதவியின்றி இலவயக் கல்வியினை அளிப்பது போன்று, உங்கள் அனைவரின் உதவியுடனும் பிள்ளைகளுக்கான மதிய உணவினையும் இலவயமாக கடந்த 3 ஆண்டுகளாக வழங்கி வருகின்றோம். புதிய தலைமுறை இதழ் கண்டு இத்திட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் சுமார் 55 பேர் மதிய உணவு வழங்கியுள்ளார்கள்.
எதிர்வரும் காலங்களில்...• புதிய கட்டிடங்கள் திறப்பு விழா.
•6- வகுப்பினைத் தொடங்கி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவது.
•எல்லோரும் பயன்பெறும் குழந்தைகளுக்கான நூலகம்.
•போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் ‘‘கல்வி வழிகாட்டி பயிற்சி மையம்’’.
உள்ளிட்டவைகளை உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடும் உருவாக்குவோம்.
கற்கின்ற கல்வி ஒரு தலைமுறைக்கு வழிகாட்டுகின்றது.
நமது தாய்த் தமிழ் மழலையர் (ம) தொடக்கப்பள்ளி பல தலைமுறைகளை உருவாக்குகின்றது.
No comments:
Post a Comment