Tuesday, October 6, 2015

குழந்தையின் கற்பனை கதை

சீதை – ஸ்பைடர் மேன் – ஹல்க் – டோரா – ஹனுமான் – சரித்ரா – சென்னை- கதை  
------------------------------------------------------------------- 
சென்னையில் பெருமையாக சொல்லப்படும் பள்ளி ஒன்றில்  மழலையர் வகுப்பு (யு.கே.ஜி) மாணவர் சேர்க்கையின்போது குழந்தைக்கும், பள்ளி முதலவருக்கும் நடைபெற்ற உரையாடல்…
முதல்வர் குழந்தையிடம் பேசத் தொடங்கி
“உங்க.. பேரு என்ன?
“சரித்ரா”
“குட் உனக்குத் தெரிஞ்ச ஏதாவது சொல்லு பார்க்கலாம்”
“எனக்கு நிறையத் தெரியும் உங்களுக்கு என்ன வேணும்”
இடம் கிடைக்காதோ என பயந்துபோன சரித்ராவின் அம்மா லேசாக எடுத்துக்கொடுக்கப் பார்த்தார். ஆனால் முதல்வர் அதனைத் தடுத்துவிட்டார்.
“நீ சொல்லு.. ஏதாவது ரைம்ஸ், ஸ்டோரி உனக்குத் தெரிஞ்சத சொல்லு”
சரித்ரா சளைக்கவில்லை.
“ரைம்ஸா, ஸ்டோரியா. என்ன சொல்லணும்”
“சரி ஏதாவது ஸ்டோரி சொல்லு”
“நான் படிச்ச ஸ்டோரி சொல்லவா? இல்ல, நான் எழுதுன ஸ்டோரிய சொல்லவா”
“ஓ.. நீ ஸ்டோரியெல்லாம் கூட எழுதுவியா”
“ஏன் எழுதக்கூடாதா”
“சரி சொல்லு”
“ராவணன், சீதையை ஸ்ரீலங்காவுக்கு கடத்திட்டுப் போயிட்டாரு”
“ம்.. சொல்லு”
“சீதையை காப்பாத்துறத்துக்கு ராமன், ஹனுமான்கிட்ட ஹெல்ப் கேட்டாரு. ஹனுமானும் சரின்னு சொல்லிட்டாரு”
“ம்.. அப்புறம்”
“இப்போ அனுமான் அவரோட ஃப்ரெண்ட் ஸ்பைடர்மேனுக்கு போன் போட்டாரு” குழந்தையின் இந்த ட்விஸ்டை யாரும் எதிர்பார்க்கவில்லை.
“எதுக்கு”
“ஏன்னா.. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில நிறைய மலைகள் இருக்கு. ஸ்பைடர் இருந்தா டக்டக்னு கயிறு கட்டி வேகமாகப் போலாம்ல”
“ஹனுமானும் பறப்பாரே?’’ என்று ஆர்வத்துடன் முதல் பதில் சொன்னார்.
“பறப்பாரு.. ஆனா. அவரு கையில சஞ்சீவி மலை இருக்கிறதால அவரால வேகமாப் பறக்க முடியாது”
முதல்வர் ஆச்சரியத்துடன் வியந்து அமைதியானார். பெற்றோர் என்ன சொல்வது என தெரியாமல் தவித்தனர். சிறிது மெளனத்திற்குப் பிறகு குழந்தை கேட்டது “சொல்லட்டா.. வேணாமா?”.
“சொல்லு.. சொல்லு..” முதல்வருக்கு ஆர்வம் அதிகமானது.
“ஹனுமானும் ஸ்பைடர்மேனும் வேகமா இலங்கைக்குப் போய் ராவணன்கிட்ட சண்டை போட்டு சீதையை காப்பாத்திட்டாங்க. சீதை அவங்க ரெண்டு பேருக்கும் நன்றி சொன்னாங்க”
“ஏன்”
“உதவி செஞ்சவங்களுக்கு நன்றி சொல்லணும்தானே?”
“சரி.. சரி.. அப்புறம்”
“அப்புறம்.. ஹனுமான் போன் பண்ணி ஹல்க்கைக் கூப்பிட்டாரு”
எல்லோரும் குழந்தையை கேள்வியோடு பார்த்தனர். அதை உணர்ந்த குழந்தை.. “வரும்போது ரெண்டுபேரும் ஈசியா வந்துட்டாங்க.. இப்போ சீதையை தூக்கிட்டுப் போக ஆள் வேணும்ல”
“ஹனுமானே குழந்தையை தூக்கலாமே”
“எப்படி முடியும்? அவரோட ஒரு கையில் மலை இருக்கு. இன்னொரு கையில் ஸ்பைடர் மேன் கயிற்றைப் பிடிக்கணுமே.”
எல்லோரும் சிரித்துவிட்டனர்.
“ம்.. அப்புறம்”
“மூணு பேரும் இந்தியா கிளம்புறப்போ.. என் ஃப்ரெண்ட் அன்புவைப் மீட் பண்றாங்க. சீதா அவன்கிட்ட கொஞ்ச நேரம் பேசிகிட்டு இருந்தாங்க”
“உன் பிரெண்ட் அன்பு எப்படி  அங்க வந்தான்”
“இது நான் எழுதிய கதை யார் வேணாலும் வருவாங்க”
முதல்வருக்கு கோபமில்லை. அடுத்த ட்விஸ்ட்டுக்காக காத்திருந்தார்.
“அப்புறம் எல்லோரும்  இந்தியா வந்துட்டாங்க. சென்னைக்கு வந்து வேளச்சேரி பஸ் ஸ்டாண்டு கிட்ட நின்னாங்க”
“ஏம்மா பஸ் ஸ்டாண்டு கிட்ட நின்னுட்டாங்க”
“வழி மறந்துபோச்சு. அதான் நின்னுட்டாங்க. உடனே ஹல்க்குக்கு ஒரு ஐடியா வந்துச்சு. அவர் உடனே டோராவுக்கு போன் பண்ணார்”
டோரா என்பது வழிகாட்டும் கதாபாத்திரம் என்பது அன்றைக்குதான் தெரிந்தது.
“டோரா வந்ததும் எல்லோரும் சேர்ந்து சீதையைக் கொண்டுபோய் வேளச்சேரி வீனஸ் காலனில விட்டுடாங்க.. அவ்ளோதான்” என சின்னச் சிரிப்புடன் சரித்ரா கதையை முடித்தாள்.
மிகவும் அமைதியாக முதல்வர் கேட்டார் “ஏம்மா,, சீதையை வீனஸ் காலனில கொண்டுபோய் விட்டீங்க”
“ஏன்னா.. அங்கேதான் என் வீடு இருக்கு.. நான்தான் சீதை”.


(இக்கதை கோபிநாத் அவர்கள் எழுதிய “பாஸ்வேர்டு” நூலில் உள்ளது. விகடன் பிரசுரம். இது நூலுக்காக எழுதப்பட்ட கதையா அல்லது உண்மையா எனத் தெரியவில்லை. ஒருவேளை உண்மைச் சம்பவமாக இருந்தால் இப்போது அந்தக் குழந்தையை காணவேண்டும். அதே அறிவு, புத்திசாலி, கதைசொல்லும் பழக்கத்துடன் உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும். ஆங்கில வழிப் பள்ளியில் படித்திருந்தால் வாய்ப்பில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும்.)

Wednesday, September 23, 2015

மாணவர்களுக்கு - டெங்கு காய்ச்சலை தடுக்க - நிலவேம்பு கசாயம்

டெங்கு காய்ச்சலை தடுக்க பள்ளியில்
நகர மன்றத் தலைவர் கே.வி.என் நிலவேம்பு கசாயம் வழங்கினார்

திண்டிவனம் உரோசனையில் உள்ள தாய்த்தமிழ் நடுநிலைப் பள்ளியில் இன்று 23.09.2015 மாலை 3.00 மணியளவில் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலை தடுப்புதற்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

முகாமில் டெங்கு மற்றும் டைபாய்டு போன்ற வைரஸ் உள்ளிட்ட கிருமிகளால் ஏற்படும் காய்ச்சல்களை தடுப்பதற்கான மருந்தாக நிலவேம்பு கசாயம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் திண்டிவனம் நகர மன்றத் தலைவர் திரு.கே.வி.என்.வெங்கடேசன் அவர்கள் நிலவேம்பு கசாயத்தினை வழங்கினார். மேலும் நகர மன்ற உறுப்பினர்கள் திரு.வேணுகோபால், திரு.சுதாகரன், பெ.ஆ.க. தலைவர் செ.விஸ்வதாஸ்,  தலைவர் பிரபா.கல்விமணி ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். தாளாளர் மு.பூபால் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் தலைமை ஆசிரியர் எஸ்.ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். பள்ளி பொருளாளர் முருகப்பன் நன்றி கூறினார்.

டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான இம்முகாம் மூன்றாம் ஆண்டாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும். தடுப்பு மருந்தினை திருச்சி மூலிகை மருத்துவர் திரு.திருஞானம் அவர்கள் தயாரித்ததாகும். அவர் வழிகாட்டுதல் படி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. இதில் நிலவேம்பு, சுக்கு, மிளகு, வெட்டிவேர், விளாம்மிச்சம் வேர், கோரைக்கிழங்கு, பற்படாக, சந்தனம், விஷ்ணுகிராந்தி, பேய்புடல் ஆகிய 10 மூலிகைகள் கலந்து தயாரிக்கப்பட்டதாகும்.








18.08.209  இன்று பகல் 11.30 மணிக்கு தாய்த் தமிழ் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டமும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக காலணி வழங்கும் விழாவும் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு பள்ளி அறங்காவலர் பேராசிரியர் கே.வி.ஜி அவர்கள் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செ.விஸ்வதாஸ் வரவேற்றார். 

சென்னை, அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் சா. குப்புராஜ் அவர்கள் தனது தாயார் திருமதி சா.கல்யாணி அவர்களின் நினைவாக 181 மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் 17 பேர் என மொத்தம் 198 பேருக்கு காலணிகளை இலவசமாக வழங்கினார். விலங்கினங்களைப் துன்புறுத்துக் கூடாது, அவைகளைப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கில் விலங்கினங்களின் தோலில் செய்யாமல் செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட சுமார் ரூ 50,000 மதிப்பிலான 190 ஜோடி  காலணிகளை வழங்கினார். 

காலணிகளை சென்னையிலுள்ள Sole Foundation என்கிற நிறுவனத்தை நடத்துகின்ற திருமிகு. அர்சீன் மூசா என்பவர் கைவினை கலைஞர்களை வைத்து தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் மு.பூபால், அறங்காவலர்கள் பேராசிரியர் பிரபா.கல்விமணி, தி.அ.நசீர் அகமது, இரா.முருகப்பன், கோ.வடிவேல், அம்பேத்கர் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு இயக்கத் தலைவர் மோ.மணி மற்றும் பெற்றோர்கள் 40 பேர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இறுதியாக ஆசிரியர் இளவரசன் நன்றி கூறினார். 






Tuesday, November 8, 2011

வண்டிக்காரக் காவலர்

வண்டிக்காரக் காவலர்

பெருமாள் பெத்தபுள்ள


பேரெடுத்து வளர்ந்த புள்ள


நீ பெத்தது நாலு புள்ள.


ரெண்ட கரசேத்த.


ரெண்ட கரசேக்காம


நீ


கரதேடி போயிட்டியே.


அதிகாலையில


வண்டி பூட்டி.. போயி வந்து..


களைப்பார மாட்ட கட்டி


உடனே பள்ளிக்கு நீ வந்து


உன் பாதத்தை பதிச்சுடுவ..


பள்ளிக் குப்பைகளை


நீ வந்து கூட்டிடுவ


அடுத்த வேல இன்னானு


எடுத்துக் கட்டி செஞ்சிடுவ

சுட்டெரிக்கும் வெயிலும்


நீ சட்டத் துணி போட்டதில்ல


நீ இருக்கும்போது


எந்த பொருள் கேட்டாலும்


இங்க இருக்கு


அங்க இருக்குன்னு


எடுத்து வந்து தந்திடுவ!


இப்போ


எந்தப் பொருள்


எங்க இருக்கு


எங்களுக்கு தெரியலையே!


யார் எந்த வேலையை


எப்படிச் சொன்னாலும்


மறுக்காம செஞ்சிடுவ!


யார் என்ன சொன்னாலும்


மனசுக்குள்ள வச்சிகிட்டு


முகம் சுளிக்காம


நடந்துக்குவ!

நீ


தண்ணி ஊத்தி


வளர்த்த மரம்


பள்ளியெல்லாம்


தளதளன்னு நிக்குதய்யா!

எங்க


நெஞ்சமெல்லாம்


உன் நினைப்பு


தினம்


வந்து வந்து நிக்குதய்யா!


கவிதை ஆக்கம்.

-கா.வ.கன்னியப்பன்,
ஆசிரியர்,

தாய்த் தமிழ்ப் பள்ளி

பள்ளிக் காவலர் பெ.அர்ச்சுனன் மறைவு

சுமார் 7 வயதுக் குழந்தையாக இருக்கும்போதே, பிறந்த பெலாகுப்பம் கிராமத்தை விட்டுவிட்டு திண்டிவனம் ரோசனைப் பகுதிக்கு வந்துள்ளார். சாப்பாட்டிற்காக கூப்பிடுகின்ற வீட்டில் எல்லாம் மாடு மேய்த்துக் கொடுத்துள்ளார். பிறகு, கிடைக்கின்ற அன்றாடக் கூலி வேலைக்கும் சென்றுள்ளார்.


திண்டிவனம் வட்டம், பெலாகுப்பம் கிராமத்தில் பெருமாள்-சின்னப்பாப்பா தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே தாயை இழந்த நிலையில், வேலை தேடி ரோசனை வந்துள்ளார். இவரின் ஓய்வறியாத கடுமையான உழைப்பையும், நல்ல குணத்தையும் பார்த்த, நெற்குணம் நடேசன் தனது மகள் யசோதை அம்மாளை திருமணம் செய்துகொடுத்தார்.

சொந்தமாக உழைத்து முன்னேற மனைவியின் பெற்றோர் உதவியுடன் மாடும், வண்டியும் வாங்கியுள்ளார். மாட்டையும், வண்டியும் உயிர்போல நேசித்தார். உயிர் போகும்வரை உழைத்துக்கொண்டே இருந்தார்.

பள்ளி தொடங்கும்போது, அருகிலேயே இருந்து மிகப்பொறுப்பாய் பள்ளியிலிருந்த கட்டுமானப் பொருட்களைப் கண்காணித்துக் கொண்டிருந்தார். பாதுகாப்பது, வேலைகளைச் செய்து முடிப்பது உள்ளிட்டவைகளிலும், பள்ளியின் மீதும், அவருக்கிருந்த அக்கறை ஈடுபாட்டின் காரணமாக அவர் பள்ளிக்குக் காவலராக நியமனம் செய்யப்பட்டார்.

பள்ளி தொடங்கி ஒவ்வொரு நாளும் இவரின் காலடி படாமல் பள்ளி மூடப்பட்டதுமில்லை, திறந்ததுமில்லை. இவரின் அனுமதியில்லாமல், பார்வையில் படாமல் பள்ளியில் எந்தவொரு பொருளும் இடம் மாறியதில்லை.

கடந்த ஆண்டு பள்ளியில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் அனைத்துப் பணிகளுக்கும் உடனிருந்து ஒத்துழைத்தார். எல்லோருக்கும் எல்லா வேலைகளையும் செய்தார். விழா முடிந்த மறுநாள் உடல் நிலை சரியில்லாமல் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர். 10.05.2011 அன்று அங்கேயே மரணமடைந்தார். எவரும் எதிர்பார்க்காத, ஏற்றுக்கொள்ள முடியாத மரணம்.

செல்வம், ரமேஷ், செந்தில் என்கிற மூன்று மகன்கள், வாசுகிசுதா என்கிற ஒரே மகள் இவருடைய பிள்ளைகளாகும். இரு மூத்த மகன்களும் திருமணமாகி தனிக் குடும்ப வாழ்க்கை வாழ்கின்றனர். திருமணமாகாத மகன் செந்தில்(27), மகள் வாசுகிசுதா(24), உடல் நிலை சரியில்லாத மனைவி யசோதயம்மாள் ஆகியோர் தனியாக வாழ்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பள்ளியில் தினம் தினமும், நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் காவலரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நம்முடன் கலந்துறவாடி இருக்கின்றார்கள். ஒவ்வொரு நாளும் கூலி வேலை செய்து, குடும்பத்தைக் காப்பாற்றி, வளர்த்து வந்த மாபெரும் உழைப்பாளி. இவரின் எதிர்பாராத மரணத்தால் குடும்பமும் மிகுந்த கவலையுடன் வாழ்ந்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் உழைத்து உழைத்து குடும்பத்தைப் பாதுகாத்து, பள்ளியிலும் காவலராய்ப் பணியாற்றி, திடீரென மறைவுற்றது அவரது குடும்பத்திற்கும், பள்ளிக்கும் ஈடு செய்யமுடியாத இழப்பு. 

Friday, May 27, 2011

10-வது தேர்வு - தாய்த்தமிழ் பள்ளி சாதனை

தாய்த்தமிழ் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்று, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்கள் முதல் குழுவிறாக தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
தாய்த்தமிழ் பள்ளியில் பயின்ற மாணவி அகிலா மொத்தம் 489 மதிப்பெண்கள் பெற்று திண்டிவனம் கல்வி வட்டத்தில் முதல் மாணவியாகவும்,  விழுப்புரம் மாவட்ட அளவிலான அரசுப்பள்ளிகளில் இரண்டாம் இடமும் பெற்று, அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைப்பார்கள் என்பதை நிருபித்துள்ளார்.
மதிப்பெண்கள் :
தமிழ் - 96
ஆங்கிலம் - 97
கணிதம் 100
அறிவியல் 99
சமூக அறிவியல் 97
மொத்தம் 489